*அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை வானிலை மையம் தகவல்*
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் பருவமழை நிறைவு பெற்றது. அதன் பிறகு மாநிலத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. வழக்கமாகக் கோடைக் காலம் மே மாதம் தான் உச்சம் தொடும். ஆனால், இந்த முறை பிப். மார்ச் மாதங்களிலேயே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோடை மழை: அந்தளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சில காலமாகத் தமிழ்நாட்டில் பரவலான மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் கோடை வெப்பம் பல்வேறு இடங்களிலும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
11 மாவட்டங்கள்: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, சிவகங்கை, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் வாய்ப்பு இருக்கிறது. சாலைகளிலும் நீர் தேங்கலாம் என்பதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் சூழல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கேற்ப பொதுமக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கிளைமேட் எப்படி: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வரும் மே 17 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். மேலும், நாளை மே 15 வரை அடுத்த 3 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 38°-40° செல்சியஸ், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36°-38° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°-37° செல்சியஸ் இருக்கக்கூடும். மே 16, 17 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை - இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.